×

பாகம்பிரியாள் கோயிலில் நான்கு வீதிகளிலும் கழிவுநீர் கால்வாய் பக்தர்கள் வேண்டுகோள்


திருவாடானை, பிப்.17: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலின் நான்கு வீதிகளிலும் கழிவுநீர் கால்வாய் அமைத்துதர வேண்டுமென பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோரும், வியாழன், வெள்ளி கிழமைகளில் ஆயிரக்கணக்கானோரும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் இக்கோயிலை சுற்றி அதிகளவில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக மக்கள் வருகையால் எப்போதும் வீதியெங்கும் குப்பைகள் நிறைந்திருக்கும். அனைத்து கடைக்காரர்களும் தங்களது குப்பைகளை சாலையோரம் கொட்டி விடுவதால் குப்பைகள் குவிந்து விடுகின்றது. கடைகளின் கழிவுநீர் செல்வதற்கும் வழியில்லாமல் தெருவோரம் தேங்கி விடுகிறது.

இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே கோயில் வீதிகளை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைத்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருவெற்றியூர் பொதுமக்கள் கூறுகையில், அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதாலும் கடைகளின் பெருக்கத்தாலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் கழிவுநீர் வழிந்தோட ஏதுவாக கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீர் சாலையோர பள்ளங்களில் தேங்கிவிடுகின்றன. குறிப்பாக மழை காலங்களில் மழைநீரும் ஓட வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. எனவே கோயிலின் நான்கு வீதிகளிலும் கழிவுநீர் கால்வாய் அமைத்துதர வேண்டும் என்றனர்.

Tags : Devotees ,streets ,Bhagambriyal ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி