×

தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு ஊராட்சிகளில் இருந்து நகராட்சிக்கு பெயர்களை மாற்றும் வாக்காளர்கள் கண்காணிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, பிப். 17: சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சிகளில் இருந்து பெயர் நீக்கம் செய்து நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர்களாக சேர்பவர்களை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 445 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் மூலம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 445 ஊராட்சி தலைவர்கள், 3 ஆயிரத்து 126 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 161 ஒன்றிய கவுன்சிலர்கள், 16 மாவட்ட கவுன்சிலர்கள் ஊரகப்பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 12 பேரூராட்சிகளில் 186 கவுன்சிலர்கள், 3 நகராட்சிகளில் 90 நகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய கவுன்சில் வார்டுகளின் எல்கைகளை மறு வரையறை செய்து வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சிக்கு தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதை பயன்படுத்தி ஊராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தங்களது வாக்குகளை மாற்றும் பணியில் ஈடுபடுவதாகவும், நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட உள்ள பலர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் அருகில் உள்ள கிராமங்களை சொந்த ஊராக கொண்டவர்களாவர். இவர்களில் ஏராளமானவர்களுக்கு ஏற்கனவே அவர்களின் சொந்த கிராமங்கள் உள்ள ஊராட்சிகளில் வாக்கு உள்ளது. இவர்கள் தேர்தல் நேரத்தில் கிராமங்களுக்கு சென்று வாக்களிப்பர். சிலர் தாங்கள் வசிக்கும் நகரிலும் வாக்குகள் வைத்துள்ளனர். இரண்டு இடங்களில் வாக்குகள் இருக்கும். இரட்டைப்பதிவுகளும் உள்ளன.

திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் கூறியதாவது: ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து பல மாதங்கள் கழித்து நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடக்க இருப்பதால் வாக்குகளை இடமாற்றம் செய்யும் முயற்சி, இரட்டை பதிவுகள் உள்ளவர்களை வாக்களிக்க வைக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. எனவே தற்போது வாக்குகளை ஊராட்சிகளில் இருந்து நீக்கி பேரூராட்சி, நகராட்சிகளுக்கு மாற்றுபவர்களை கண்காணிக்கவும், இரட்டை பதிவுகள் உள்ளதாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றார்.

Tags : voters ,parties ,municipalities ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...