தமிழக அரசு கொத்தடிமை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

மதுரை, பிப். 17: தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற கொத்தடிமை முறையை நீக்கி, காலமுறை ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்க மதுரை மண்டல மாநாடு, மதுரையில் நேற்று நடந்தது. சங்கத்தின் மண்டலத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில இணை பொதுச்செயலாளர் மனோகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘இத்துறையின் அமைச்சராக இல்லாவிட்டாலும், உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற உறுதியாக இருப்பேன்’ என்றார்.
Advertising
Advertising

மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சங்கக்கொடியை ஏற்றினார்.

இதில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கச்செயலாளர் கண்ணன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன், டான்சாக் மாநில தலைவர் இன்பநாதன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் மதுரை மண்டலத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற கொத்தடிமை முறையை நீக்கி, காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பல்வேறு தரப்பினருக்கு ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை சரி செய்து, 8வது ஊதியக்குழுவில் உள்ள ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சித்திக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

கடந்த 2016 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட துறைரீதியான தீர்மானங்கள் உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: