×

மைய மண்டபம் சீரமைப்பு பணி எழுமலைப் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்..?

உசிலம்பட்டி, பிப். 17: எழுமலை பகுதியில் கடந்த 3 மாதங்களாகவே எழுமலை அருகே சடையாண்டிகோவில் கோபாலபுரம் பகுதியில் உள்ள விவசாயநிலங்கள் மற்றும் விவசாயிகளின் குடில் மற்றும் கொட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக இப்பகுதியிலுள்ள விவசாயிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு இப்பகுதியிலுள்ள பிச்சைப்பாண்டி என்பவரது தோட்டத்தில் கட்டியிருந்த கன்றுகுட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு ராமசாமி மகன் சேகர் என்பவரது தோட்டத்தில் கட்டிகிடந்த 3 கன்றுகுட்டிகளை சிறுத்தை கடித்ததில் 2கன்றுகள் குட்டிகள் பலியானது. இது சம்மந்தமாக சிறுத்தை இல்லை, இது செந்நாய் அல்லது வேறு ஏதோ வனவிலங்கு என்று வனத்துறை கூறி வந்தனர்.

ஆனால் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் தோட்டப்பகுதியில் சிறுத்தை ஓடியதாக அப்பகுதி விவசயிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் எழுமலை கோபாலபுரம் சாலையில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி கிடந்த கன்றுகுட்டியை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. நேற்று தோட்டத்திற்கு சென்று ராமசாமி பார்த்தபோது கன்றுக்குட்டியின் கழுத்துப்பகுதி முழுவதும் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த இப்பகுதி விவசாயிகள் இறந்த கன்று குட்டியின் உடலுடன் எழுமலை தேவர்சிலை அருகில் உசிலம்பட்டி-எம்.கல்லுப்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச்செய்தனர்.

அதன் பிறகு இறந்த கன்றுகுட்டியின் உடலை வேனில் ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி-பேரையூர் சாலை கணவாய்கேட் எழுமலை பிரிவிலுள்ள வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வனச்சரகர் அன்பழகன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த வனவிலங்கு என பிரேத பரிசோதனையை மட்டுமே வைத்து கண்டுபிடித்து விட முடியாது. மேலும் கன்றுகுட்டியை தாக்கிய விலங்கின் காலடித்தடம் மற்றும் கன்றுக்குட்டியைத்தாக்கிய விதம் குறித்துதான் கண்டுபிடிக்க முடியும். அப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம்.

சிறுத்தையோ அல்லது புலியாக இருந்தால் அதனை கூண்டுவைத்து பிடித்து வனச்சரக சரணாலயப்பகுதியில் கொண்டு விட்டுவிடுகிறோம். அதற்காக இன்னும் இரண்டு தினங்களில் அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு எந்த விலங்குகள் நடமாட்டம் உள்ளது என்று ஆய்வு செய்து விரைவில் பிடித்து விடுகிறோம் என உறுதியளித்துள்ளார். மேலும் இது சிறுத்தை அல்லது புலிதான் என்று உறுதியிட்டு கூறமுடியாது. அவைகளுக்கு இது மட்டும் உணவாகாது, எனவே விரைவில் என்ன விலங்கு என்று கண்டுபிடித்து உடனடியாக அதனை பிடித்து வனப்பகுதியில் கொண்டுசென்றுவிட உறுதியளிப்பதாக கூறினார்.

Tags :
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு