இஸ்லாமியர்கள் போராட்டம் அறிவிப்பால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை, பிப். 17: இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் அறிவிப்பால், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக கடந்த 14ம் தேதி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள், இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து, அன்றிரவு மதுரையில் பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். இதில் பெண்களும் அதிகளவில் திரண்டு வந்து பங்கேற்றனர். மதுரை மகபூப்பாளையத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், காந்தி அருங்காட்சியகம், தமுக்கம், கலெக்டர் அலுவலகம், ராஜாஜி பூங்கா உள்ளிட்ட முக்கியமான இடங்களின் நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டு, யாரும் உள்ளே வந்து போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என கண்காணித்தனர். கடந்த இரண்டு நாளாக பொதுமக்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் கெடுபிடி செய்தனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விடுமுறை நாள். போராட்டக்காரர்கள் யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து வாசல் கதவுகளையும் பூட்டி, முன்பகுதியில் உள்ள ஒரு நுழைவு வாயிலில் ஒருபக்க கதவை பூட்டி, மற்ற பகுதியில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். 25க்கும் மேற்பட்ட போலீசார் வாயிலில் பாதுகாப்பு நிறுத்தப்பட்டனர். வஜ்ரா வேன் உள்ளிட்ட 3 போலீஸ் வேன்களும் நிறுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் யாரேனும் உள்ளே வந்துவிடாத அளவுக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு சந்தேகப்படும்படி வந்தவர்களை போலீசார் விசாரித்து உள்ளே அனுமதித்தனர்.இந்நிலையில், இன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

அதேபோன்று, 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளன. இதனால், நேற்று முதல் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உளவுத்துறை போலீசாரும், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: