×

கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல வனத்துறை தடை

கொடைக்கானல், பிப். 17: கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு, பேரீஜம் ஏரியின் அப்பர் லேக் வியூ, பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். ஒரு வாகனத்திற்கு ரூ.200 கட்டணம் செலுத்தி, சிறப்பு அனுமதி பெற்று அதன் பின்னரே இந்தப் பகுதிகளுக்குள் செல்ல முடியும். நாள்தோறும் காலை கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, அனுமதி ரசீது பெற்று மோயர் பாயிண்ட் பகுதியில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் அந்த ரசீதை கொடுத்து, பின்னர்தான் இந்த பேரிஜம் ஏரி வனப் பகுதிக்குள்
செல்ல முடியும்.

அழகிய இந்த வனப்பகுதியில் வன மிருகங்கள், பறவைகள் உள்ளிட்டவைகளை காணலாம். ஒரு குறிப்பிட்ட அளவு வாகனங்களுக்கு மட்டுமே வனத்துறையினர் நாள்தோறும் அனுமதி வழங்கி வந்தனர். இந்த நிலையில் இந்த பேரிஜம் வனப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகுந்த சேதம் அடைந்துள்ளதால் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சாலை பணி முடிவடையும் வரை, பேரிஜம் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானல் வனத்துறை தடை விதித்து உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை இரண்டு தினங்களுக்கு முன்பு வனத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் அமைக்கும் பணியினை வனத்துறை தீவிரமாக எடுத்து வரும் இந்த நிலையில் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதி நிரந்தரமாக மூடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாகத்தான் அவ்வப்போது பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு தடை விதித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

Tags : Forest Department ,Kodaikanal lake ,
× RELATED தொகரப்பள்ளி காப்புக்காட்டில்...