ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பு 100 வீடுகள் இடித்து அகற்றம்

சேலம், பிப்.17: சேலம் கரூப்பூர் டால்மியா போர்டு பகுதியில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். 50க்கும் மேற்பட்ட கடைகளும் கட்டியிருந்தனர். இந்த இடம் இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடமாகும். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக இடத்தை காலி செய்யுமாறு ரயில்வே துறையினர் கூறிவந்ததுடன், நோட்டீசும் வழங்கினர். ஆனால் அங்கிருந்த மக்கள், நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்துவருகிறோம், இந்த இடத்தை விட்டு எங்கு போய் வாழ்வோம்’ என கூறி வந்தனர்.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருடன் எம்ஜிஆர் நகருக்கு வந்தனர். மாநகர போலீசாரும் அவர்களுடன் சென்றனர்.  அவர்களிடம், அங்கு வசித்து வந்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். “வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொள்ள 2 நாள்கள் அவகாசம் கொடுங்கள்’ என கெஞ்சினர். ஆனால் ரயில்வே அதிகாரிகள் 4 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு, 100க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். சிலர் வீடுகளில் இருந்த பொருட்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: