×

மணப்பாறை அருகே மின் கசிவால் சோள தட்டைகள் எரிந்து நாசம்

மணப்பாறை, பிப்.17: மணப்பாறை அருகே மின் கசிவால் சோள தட்டைகள் எரிந்து நாசமாயின.
மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு சொந்தமான காடு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி எதிரே உள்ளது. இவருக்கு சொந்தமான காட்டை அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் குத்தகைக்கு எடுத்து கால்நடை தீவனங்களுக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சோளம் விதைத்துள்ளார். இந்நிலையில் அறுவடைக்கு தயாரான சோள தட்டைகளை கடந்த இரண்டு நாட்களாக கூலி ஆட்களை வைத்து அறுவடைசெய்தார். அறுவடை செய்த தட்டைகளை நேற்று வாகனத்தில் ஏற்றி பக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு செல்வதாக இருந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் காட்டின் பக்கத்திலிருந்த எலக்ட்ரிக் டிரான்ஸ் பார்மரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்த மின்சாரம் கசிந்து காட்டிற்கு பரவ ஆரம்பித்தது. அப்போது அறுவடை செய்திருந்த சோளத்தட்டைகளிலும் பரவி தீப்பிடித்து எரிந்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் தீ மளமளவென பரவியது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலிருந்த சோளத்தட்டைகள் அனைத்தும் எரிந்து தீ தானாகவே நின்றது.
தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் வந்து விசாரணை நடத்தினர். மின்கசிவால் எரிந்து சாம்பலான சோளத்தட்டைகளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags : leaks ,Manapparai ,
× RELATED திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு