×

ஆதிதிராவிடர் பள்ளிகளை ஆய்வு செய்ய புதிய மண்டலங்கள் உருவாக்க வேண்டும் தலைமையாசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருச்சி, பிப்.17: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கூட்டமைப்பு, அம்பேத்கர் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனை கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நேற்று நடந்தது.
மாநிலத்தலைவர்கள் தலைமை ஆசிரியர் சங்கம் ரமேஷ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். குகநாதன், சுந்தரம், வெங்கடேசன், வடிவேலன் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் பாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில், ‘காலியாக உள்ள உதவி இயக்குனர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். 100 சதவீத தேர்ச்சி வழங்கும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி ஊக்கமளிக்க வேண்டும். மாணவர்களின் நலன்கருதி காலியாக உள்ள 32 மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள், 46 உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாணவர்களின் நலன் கருதி 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு அம்பேத்கர் சிறப்பு வழிகாட்டி புத்தகம் உடனே வழங்க வேண்டும். ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கு முன் ஏற்கனவே பணிபுரிந்துவரும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கவேண்டும். இடைநிலை ஆசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் பிரமோத்குமார் நன்றி கூறினார். பின்னர் மாநிலத் தலைவர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு அத்துறை அலுவலர்களே ஆய்வு செய்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தமிழகத்தை 10 மண்டலங்களாக பிரித்து, 10 மண்டல உதவி இயக்குனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அவர்கள் மூலம் ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : Leadership Federation ,zones ,schools ,Aboriginal ,
× RELATED சென்னை, வேலூர், நெல்லை மண்டலங்களில்...