கண்துடைப்புக்காக இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது திருவெறும்பூர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு

திருவெறும்பூர், பிப். 17: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திருவெறும்பூர், மணிகண்டம் ஒன்றிய பகுதியில் நடந்த படித்த இளைஞர் மற்றும் பெண்களுக்கான இலவச வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம் கண்துடைப்புக்காக அரசு நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வேலை இல்லாமல் அவதியுறுவதை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் இலவச வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகளை முகாம்கள் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர் சரவணன் தலைமையில் திருவெறும்பூர் முக்குலத்தோர் ஆரம்பப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான முகாம் நடந்தது. முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கு தேர்வு செய்ய 43 நிறுவனங்கள் பங்கேற்றது. ஆனால் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் அமர்ந்து தங்களுக்கு தேவையான தகுதி உள்ளவர்களை தேர்வு செய்வதற்கு உரிய இடம் கூட வழங்கவில்லை. மேலும் இந்த முகாமில் 2,000 பேர் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முகாமில் 200 பேர் கூட பங்கேற்கவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு பல்வேறு தொழில் நிறுவனாங்களும் தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: