×

திருவாரூரில் 553 பெண்களுக்கு மானியவிலை இருசக்கர வாகனம்

திருவாரூர், பிப். 17: தமிழ்நாடு ஊரக வாழ்வதார இயக்கத்தின் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் விழா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று இருசக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகையில், பெண்கள் தங்கள் சொந்த காலிலே நிற்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கில் பெண்கள் நலன்காக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி அதனை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தினார். தொடர்ந்து தாலிக்கும் தங்கமாக 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்ததை 8 கிராம் தங்கமாக வழங்க உத்தரவிட்டு செயல்படுத்தியவர் ஜெயலலிதா. இதில் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பட்ட படிப்பு அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் திருமண உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பினை தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்தார். இதனால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற எந்த திட்டங்களும் தமிழக அரசால் அனுமதிக்கப்படமாட்டாது.
மகளிர் பணியிடங்களுக்கும்,பிற வேலைகளுக்கு எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தினை அறிவித்தார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய தினம் 553 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரம் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் இது வரை 3343 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 35 லட்சம் மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை உழைக்கும் மகளிர் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் லேகா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், கோட்டூர் ஒன்றியக் குழு தலைவர் மணிமேகலை முருகேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன் வாசுகிராமன், உதவி திட்ட அலுவலர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur ,
× RELATED வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர்...