×

பொருளாதார மாற்றத்தால் ஜவுளி ஏற்றுமதி தொழில் எதிர்பார்த்தபடி இல்லை

கரூர், பிப்.17: பொருளாதார மாற்றநிலை, ஜவுளி உற்பத்திக்கு வெளிநாடுகளுடன் போட்டிபோடும் அளவுக்கு ஊக்கம் அளிக்காத நிலை காரணமாக ஜவுளி ஏற்றுமதி தொழில் எதிர்பார்த்த அளவில் இல்லை என ஏற்றுமதியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
உலகசந்தையல் இந்தியாவுக்கு போட்டியாக வீட்டுஉபயோக துணி ஆர்டர்களை பெறுவதில் சீனா விளங்கியது. ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தை இந்த ஆண்டும் நடைபெற்றது. கரூரில் இருந்து ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடந்த ஜனவரி மாதம் இந்த கண்காட்சியில் பங்கேற்று மாதிரிகளுடன் ஸ்டால்களை அமைத்திருந்தனர். வழக்கம்போல இந்த ஆண்டும் சீனா, ஐரோப்பா, தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் ஆர்டர்களை பெற்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீன வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்திக் கூடங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர்களை இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் திரும்பப் பெற்று வருகின்றனர். இந்த ஆர்டர்கள் இந்தியாவுக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும் மத்திய மாநில அரசுகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்றி ஏற்கனவே தவித்துவரும் வீட்டுஉபயோக ஜவுளித்துறையானது இந்த ஆர்டர்களையும் பெற்று நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறது.,
இதுகுறித்து ஏற்றுமதியாளர் ஸ்டீபன்பாபு கூறுகையில், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக இருந்த சீனா உள்ளது. காரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அங்கு கொடுத்த ஆர்டர்கள் நமக்கு வரும் வாய்ப்புள்ளது. ஏற்றுமதிக்கு இது ஒருநல்ல வாய்ப்பு. டையிங் போன்ற மூலப்பொருட்கள் சீனாவில இருந்து வரத்து நின்றுவிட்டது. இதனால் மூலப்பொருட்கள் விலைஉயரும் அபாயம் உள்ளது. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் இங்கு செய்யப்படவில்லை. இந்த வாய்ப்பினை கருத்தில் கொண்டு இனியாவது சில நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டும். நூல்விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும். சாயப்பூங்கா அமைக்காததால் சாயமிடுவதில் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். கரூரில் சாயப்பூங்கா அமைக்கப்படும், நிதிஒதுக்கீடு என அடிக்கடி செய்திகள் மட்டுமே வருகிறது.
சாயப்பூங்கா அமைக்கப்படவில்லை என்பதோடு அதன் நிலை என்ன என்பதும் புரியாத நிலை உள்ளது என்றார்.

Tags :
× RELATED சென்னை வடபழனி காவல் உதவி ஆணையர்...