×

கீழ்கோத்தகிரி அரசு பள்ளியில் உணவு குறித்து விழிப்புணர்வு

கோத்தகிரி, பிப். 17:  கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் சரியான உணவு தேர்வு செய்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  தலைமை ஆசிரியர் மணி தலைமை வகித்தார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் கோமதி வரவேற்றார்.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசுகையில், ‘‘உணவுகளை தேர்வு செய்யும் போது சரியான ஊட்ட சத்து உள்ள உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். விளம்பரங்களில் வருபவை அனைத்தும் கற்பனை காட்சியே. உடல், மனம் வளர்ச்சி பெற, நாம் சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். வைட்டமின் குறைபாடுகளை போக்க ஊட்ட சத்துக்களை சேர்த்து செறிவூட்டிய உணவுகளை அதிகம் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அயோடின், வைட்டமின்கள், இரும்பு சத்துக்களை நாம் அதிகம் பயன்படுத்தும் உணவுகளில் சேர்த்து தருகிறது. காலாவதி உணவுகள், கலப்பட உணவுகளை கண்டறிந்து உணவு துறை அல்லது கலெக்டருக்கு புகார் அனுப்ப வேண்டும்,’’ என்றார்.
 கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ‘‘உணவு கலப்படம் எளிதில் கண்டறியும் முறைகளை அறிந்து வைத்து கொண்டு, உணவில் கலப்படம் இருந்தால் அவற்றை தவிர்ப்பதோடு, புகாரும் தெரிவிக்க வேண்டும். காலாவதி உணவுகளை வாங்காமல் பாதுகாப்பான உணவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்,’’ என்றார்.
 தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kokotagiri Government School ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி