×

அதிகாரிகள் அலட்சியத்தால் இறப்பு சான்றிதழ் பெற அலைக்கழிப்பு

கூடலூர், பிப். 17: நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட டீஆர் பஜார் பகுதிைய ேசர்ந்த  சந்திரமோகன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
இவரது மனைவி சாந்தி(51). இவர் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி மாலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் அவரை மீட்டு நடுவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கா 108 ஆம்புலன்சில் அன்று இரவு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஊட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் அரை மணி நேரம் கழித்து சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்து 15ம் தேதி பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவரது இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக காவல்துறை மூலம் பெறப்பட்ட ஊட்டி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை, நடுவட்டம் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட இறப்பு அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றுடன் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்து உள்ளனர்.
அப்போது நகராட்சி நிர்வாகத்தினர், மருத்துவமனையில் இறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். பின்னர் மருத்துவமனையில் வந்து கேட்டபோது நகராட்சியில் தான் இறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தங்களால் வழங்கமுடியாது என்றும் அவர்களும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் மருத்துவமனைக்கும் நகராட்சி அலுவலகத்திற்கு அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. சாந்தி இறந்துவிட்ட நிலையில் அரசு அலுவலக தேவைகளுக்காக அவரது இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் அவரது குடும்பத்தினர் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக விசாரணை நடத்தி தங்களுக்கு இறப்புச் சான்றிதழ் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி