×

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி, பிப்.17:  பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து நேற்று அதிகரித்ததால் கூடுதல் விலைக்கு ஏலம்போனது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் மற்றும் தேர்நிலை மார்க்கெட்டுகளில், வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறும்.
இங்கு, விற்பனைக்காக கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் தரத்திற்கேற்றார் போல், விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவால், மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. அதன்பின், இந்த மாதம் துவக்கத்தில் இருந்து சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து அதிகரித்தது.
இதில், நேற்று நடந்த சந்தை நாளில், சுற்று வட்டார கிராமம் மட்டுமின்றி திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வழக்கத்தை விட வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது. இதில், சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து நேந்திரன் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் கூடுதல் விலைக்கு ஏலம் போனது. இதில், செவ்வாழை தார் ஒன்று ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1200 வரையிலும், பூவந்தார் ரூ.650க்கும், மோரீஸ் ரூ.750க்கும்,  கற்பூரவள்ளி ரூ.650க்கும், ரஸ்தாளி ரூ.650க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.20க்கு  விலைக்கு ஏலம்போனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi ,
× RELATED 2 நாள் அறிவிக்கப்பட்டிருந்த கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை ரத்து