×

அரசு மருத்துவமனையில் மூடி கிடக்கும் உணவு உண்ணுமிடத்தை திறக்க கோரிக்கை

திருப்பூர்,பிப்.17:திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் சுமார் 3 ஆயிரம் புறநோயாளிகள், 600 உள்நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது, உறவினர்கள் வெளியூர் அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வந்தால் நோயாளிகளை சந்திக்க வந்தால் அவர்களுக்கு போதுமான ஏற்பாடு இருப்பதில்லை. அவர்களால், நோயாளிகளுடன் அதிக நேரம் இருக்க முடிவதில்லை. அவர்களோடு தங்கவும் முடிவதில்லை. எனவே, நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் ஒரு கட்டிடம் தயார் நிலையில் உள்ளது.
மேலும், இத்தகைய உறவினர்கள் காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் உணவு சாப்பிட ஏதுவான இடமில்லை. இதற்கென மருத்துவமனை வளாகத்திற்குள் கட்டப்பட்ட உணவு உண்ணுமிடம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளின் உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உணவு உண்ணுமிடத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், குடிமங்கலத்தில் இருந்து வருகிறோம். எனது மகன்  திருப்பூரில் பணியாற்றி வந்தார். அவரது உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எங்களுக்கு மாநகரில் உறவினர்கள் கிடையாது. மருத்துவமனை வளாகத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து மதியம் உணவு சாப்பிட்டோம். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் செக்யூரிட்டி எங்களை அசுத்தம் செய்யாதீர்கள் என விரட்டுகிறார். நாங்கள் எங்கு சென்று சாப்பிடுவது என தெரியவில்லை, மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு உண்ணுமிடம் திறந்து விட்டால் அங்கு சென்று சாப்பிடலாம். ஆகையால், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைந்து உணவு உண்ணுமிடம் திறக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது