33 கசிவு நீர் குட்டைகளின் நீர் பாதை ஆக்கிரமிப்பு

ஈரோடு, பிப். 17:  கீழ் பவானி வாய்க்கால் (எல்.பி.பீ) பாசனத்தில் உள்ள 33 கசிவு நீர் குட்டைகளின் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், எல்.பி.பீ பாசனம் மூலம் 34 இடங்களில் கசிவு நீர் குட்டைகள் உளளன. கவுந்தபாடி கசிவு நீர் குட்டை பாழடைந்து விட்டதால் 33 கசிவு நீர் குட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கசிவு நீர் குட்டைகளுக்கு செல்லும் நீர் பாதைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசின் மானிய கோரிக்கையின் போது நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கீழ் பவானி பாசன விவசாய சங்க நிர்வாகி வெங்கடாசலபதி கூறியதாவது: பவானிசாகர் எல்.பி.பீ பாசனத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து மங்கலபட்டி வரை 34 கசிவு நீர் தடுப்பணைகள் உள்ளன. குட்டைகளில் தண்ணீர் தேங்கினால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கசிவு நீர் குட்டைகளுக்கு செல்லும் நீர் பாதைகளில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதனை சரி செய்தால், மாவட்டம் முழுவதும் நீராதாரம் அதிகரிக்கும். ஆக்கிரமிப்புகளால் 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. கசிவு நீர் குட்டை மற்றும் நீர்வழிப்பாதை பராமரிக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்க வேண்டும். நடப்பாண்டுக்கு மானிய கோரிக்கையில் போது நிதி ஒதுக்கீடு செய்து, பராமரிப்பு பணி மேற்கொண்டால் விவசாயிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: