பெருந்துறையை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

ஈரோடு, பிப். 17: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த ஏஐடியுசி மாநில செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தற்போது 42 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மக்கள் தொகை அடிப்படையில் அதிக மக்கள் வசிக்கும் பேரூராட்சியாக பெருந்துறை பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 ஆயிரம் பேர் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பெருந்துறை மற்றும் அதற்கு அருகில் உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைத்து பெருந்துறையை இரண்டாம் நிலை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் சின்னசாமி கூறியுள்ளதாவது: பெருந்துறை பேரூராட்சி கடந்த 2016ம் ஆண்டு சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

Advertising
Advertising

அப்போது முதல் பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளை இணைத்து இரண்டாம் நிலை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இந்த இரண்டு பேரூராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருந்துறை இப்போது நகராட்சிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுள்ளது. தவிர பெருந்துறை வருவாய் வட்ட தலைமையிடமாகவும் உள்ளது. மேலும் 2ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை, மஞ்சள் விற்பனை மையம் மற்றும் ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. பெருந்துறை பேரூராட்சியில் 15 வார்டுகளும், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளும் உள்ளன.

 

இந்த இரண்டு பேரூராட்சிகளிலும் மொத்தமாக இப்போது 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சியாவதற்கு தேவையான அனைத்து வசதிகளும், கட்டமைப்பும் உள்ள பெருந்துறையை இரண்டாம் நிலை நகராட்சியாக அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு சின்னசாமி கூறியுள்ளார்.

Related Stories: