பவானி அருகே அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்

பவானி, பிப். 17:  பவானி அருகே குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரிச்சேரி காலனி மக்கள் தவித்து வருகின்றனர்.

 பவானி ஊராட்சி ஒன்றியம், ஒரிச்சேரிப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரிச்சேரி காலனி உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், இப்பகுதியைச் சேர்ந்தோர் பெரும்பாலும் தினக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு வாழையிலை அறுக்கும் பணிக்குச் செல்வதோடு, கிடைக்கும் வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். மூன்று தெருக்களைக் கொண்ட இப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர் செல்ல முறையான சாக்கடை வசதியில்லை. போதிய தண்ணீர் இல்லாததால் வீடுகளில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல், பொருட்களைப் போட்டு வைக்கும் கிடங்குகளாக உள்ளன.
Advertising
Advertising

பொதுக்கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டோரத்தில் குட்டை போன்று தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல், பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது. வேலாமரத்தூர் ரோட்டில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் அபாயம் உள்ளது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் வசதிகளை நிறைவேற்றி சுகாதாரச் சீர்கேட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: