கனிமார்க்கெட்டில் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் ஜவுளி வணிக வளாகம் கட்டுமான பணி தீவிரம்

ஈரோடு, பிப். 17:  ஈரோடு  கனிமார்க்கெட்டில் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக  வளாகம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ்  பன்னீர்செல்வம் பார்க்கில் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை செயல்பட்டு வருகிறது.  இங்கு தினசரி கடைகள், வாரச்சந்தை கடைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள்  செயல்பட்டு வந்தது. இந்த ஜவுளிசந்தையில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல்  செவ்வாய்கிழமை இரவு வரை நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் இருக்கும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள்  வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஜவுளிசந்தையில் இருந்த கடைகள்  பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து விட்டு புதியதாக  ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இங்கு செயல்பட்டு வந்த கடைகள் வேறு  பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. மேலும் தற்போது கட்டப்படவுள்ள ஜவுளி வணிக  வளாகத்தின் அருகிலேயே மாநகராட்சி சார்பில் தற்காலிக கடைகளும்  அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு ஜவுளி வணிக வளாகம் கட்டுவதற்காக ராட்ச  குழி தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த  ஜவுளி வணிக வளாகம் அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக  அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பிட்ட  காலக்கெடுவிற்குள் கட்டுமான பணிகளை முடித்து ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள்  ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து  மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின்கீழ் ரூ.51.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த  ஜவுளி வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்த ஜவுளி வணிக வளாகம் 12  ஆயிரத்து 427 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில் தரைதளத்தில்  79 கடைகளும், முதல்தளத்தில் 81 கடைகளும், இரண்டாவது தளத்தில் 81 கடைகளும்,  மூன்றாவது தளத்தில் 51 கடைகளும் அமைக்கப்படவுள்ளது. வாகனங்களை நிறுத்தும்  வகையில் முதல் தரைதளத்தில் 73 கார்களும், 132 பைக்குகளும், 2வது  தரைதளத்தில் 78 கார்கள், 131 பைக்குகளும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 160  கார்களும், 50 பைக்குகளும் நிறுத்தும் வகையில் இந்த வளாகம்  கட்டப்படவுள்ளது. இந்த வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4  லிப்டுகளும், சரக்குகளை கொண்டு செல்ல ஒரு லிப்டும், 2 எஸ்கலேட்டரும்  அமைக்கப்படவுள்ளது. கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க  வேண்டும் என்பதற்காக ஆலோசனை வழங்கி வருகிறோம். ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம்  அமையும்போது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Related Stories: