×

சகோதரத்துவத்துடன் வாழும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மோடி அரசு ஈடுபடுகிறது திருநாவுக்கரசர் எம்.பி பேச்சு

அறந்தாங்கி, பிப்.17:சகோதரத்துவத்துடன் வாழும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாக திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கூறினார்.அறந்தாங்கி ஜமாத் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் அறந்தாங்கி வ.உ.சி திடலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு அறந்தாங்கி ஜமாத் தலைவர் சேக்அப்துல்லா தலைமை தாங்கினார். ஜமாத் முத்தவல்லி முகமதுசரீபு, புதுக்கோட்டை மாவட்ட உலமா சபைத் தலைவர் சதக்கத்துல்லா, அறந்தாங்கி தொகுதி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் நஜிமுதீன், அறந்தாங்கி ஜமாத் பொருளாளர் மன்சூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களை நசுக்கும் வகையிலான ஆட்சியை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக சகோதரத்துவத்துடன் வாழும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற நாங்கள் என்றுமே துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ, அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆலங்குடி எம்.எல்.ஏவுமான மெய்யநாதன், முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, உள்ளிட்டோர் பேசினர். மணமேல்குடி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனியார், அறந்தாங்கி நகர திமுக செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.அறந்தாங்கி தலைமை இமாம் முகமதுஅபுபக்கர் தொகுத்து வழங்கினார். அறந்தாங்கி ஜமாத் முன்னாள் தலைவர் முகமதுமைதீன் வரவேற்றார். ஜமாத் துணைத் தலைவர் கிரீன்முகமது நன்றி கூறினார்.

Tags : Modi ,government ,Indian ,Brotherhood ,
× RELATED கொரோனா முன்னெச்சரிக்கைக்கான...