×

குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி, பிப். 17:  சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தையொட்டி ஜிப்மர் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்தியாவில் குழந்தை பருவ புற்றுநோய் 1.6 - 4.8 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு புற்றுநோயும் ஆண்டுக்கு 1.1 சதவீதம் உயர்ந்து வருகிறது. ரத்த புற்றுநோய், லிம்போமா மற்றும் மூளை சம்பந்தப்பட்ட கட்டி ஆகியவை ஜிப்மரில் காணப்படும் பொதுவான குழந்தை பருவ புற்றுநோயாகும். ஜிப்மரில் 2010ல் புற்றுநோய் பதிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஜிப்மரில் சிகிச்சை கைவிடப்பட்ட விகிதம் 20-25 லிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்விகிதத்தை குறைப்பதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூக தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகுத்து வருகின்றனர்.  குழந்தைகள் பருவ புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கும் ஏற்படுத்தும் விதமாக ஜிப்மர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையம் சார்பில் ஜனவரி 17ல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தை பருவ புற்றுநோய் தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

 இந்நிலையில் சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தையொட்டி ஜிப்மர் சார்பில் ‘எந்தவொரு குழந்தையும் புற்றுநோயால் இறக்க கூடாது அதிகமானவற்றை குணப்படுத்துங்கள் அனைவருக்கும் அக்கறை செலுத்துங்கள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து புதுச்சேரி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே தொடக்கி வைத்தார். இதில் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் கைகளில் புற்றுநோய் விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர். தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் முடிதானம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிறைவாக புற்றுநோய் நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags :
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி