போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்

புதுச்சேரி, பிப். 17: புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை, மத்திய அரசின் சமூகம் மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக பல்வேறு பணிப்பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் ஒரு வாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று (16ம் தேதி) காலை போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர் ஓட்டம் (மாரத்தான்) நடந்தது. கடற்கரை காந்தி திடலில் இருந்து புறப்பட்ட இந்த மாரத்தானை சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். துறை இயக்குநர் சாரங்கபாணி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, போதை ஒழிப்பு கையொப்ப பிரசாரம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, மாலையில் போதை ஒழிப்பு, தடுப்பு பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது. மேலும், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களால் தெருக்கூத்து நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பழமையான கலைகளை நினைவுபடுத்தும் வகையில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், கரலாக்கட்டை, மயிலாட்டம் நடந்தது.

இன்று (17ம் தேதி) புதுச்சேரி பிராந்தியத்தை சார்ந்த அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் சுயஉதவிக்குழுக்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையை சார்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், தங்கள் கையில் போதை ஒழிப்பு பற்றிய பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற்கொள்கின்றனர். மாலை 4 மணியளவில் போதை ஒழிப்பை வலியுறுத்தி மனிதச்சங்கிலி அமைக்கின்றனர். நாளை (18ம் தேதி) என்சிசி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து போதை ஒழிப்பு பற்றிய நாடகம், ஓவியப்போட்டி, நடனப்போட்டி பல்வேறு கல்லூரிகளில் நடக்கிறது. தொடர்ந்து, 19ம் தேதி மாலை 5 மணிக்கு ரோலர் ஸ்கேட்டிங் பள்ளி மாணவர்கள் மூலம் நடக்கிறது. 20ம் தேதி போதை ஒழிப்பு பற்றி கிரிக்கெட், கபடி போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 21ம் தேதி கம்பன் கலையரங்கில் நிறைவு நாள் விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. போதை பொருள் ஒழிப்பு மற்றும் தனித்திறமையை வெளிப்படுத்துதல் பற்றிய ஒரு சிறிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Related Stories: