கல்வராயன்மலை ஏகலைவா அரசு பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் படகு துறையில் ஆபத்தை அறியாமல் குளிக்கும் மாணவர்கள்

சின்னசேலம், பிப். 17: கல்வராயன்மலையில் உள்ள ஏகலைவா அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் படகு துறையில் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை தாலுகா வெள்ளிமலையில் மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்கும் ஏகலைவா உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 400 மாணவ-மாணவிகள் இப்பள்ளியில் படித்து வந்தனர். பின்னர் மாணவிகளின் பாதுகாப்பு கருதி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏகலைவா பள்ளி மாணவர்களை வெள்ளிமலை பள்ளியில் சேர்த்து விட்டு, இங்குள்ள மாணவிகளை வாழப்பாடி பள்ளியில் சேர்த்து விட்டனர். இதனால் இந்த பள்ளியில் தற்போது சுமார் 400 மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை என தெரிகிறது. குறிப்பாக மாணவர்கள் குளிக்க, துணி துவைக்க போதிய அளவில் தண்ணீர் வசதி இல்லை. மாணவர்கள் பலமுறை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் பள்ளி நிர்வாகமும் அங்குள்ள கிணற்றை ஆழப்படுத்தி, தண்ணீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்டு உறைவிட பள்ளியாக இருந்த நிலையிலும் துணி துவைப்பதற்கென்று மாணவர்கள் அடிக்கடி சொந்த ஊர் சென்று விடுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பள்ளிக்கு அருகில் உள்ள வெள்ளிமலை படகு துறைக்கு ஏகலைவா பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டமாக வந்து குளித்து, துணி துவைத்து செல்கின்றனர். இங்குள்ள படகு துறையில் சிறுவர்கள் குளிக்கும் போது ஆழத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மாணவர்களை தனியே அனுப்புவது ஆபத்து வரும் சூழ்நிலை ஆகும். தண்ணீர் பற்றாக்குறையால் அவர்கள் வந்தாலும் உடன் யாராவது ஒரு ஆசிரியர் அல்லது வாட்ச்மேன் வந்தால் நன்றாக இருக்கும். அப்படி துணைக்கும் யாரும் வருவதில்லை. கோமுகி அணைக்கு அருகில் உள்ள விடுதி மாணவர்கள் குளிக்க வந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் நடந்துள்ளது. ஆகையால் ஏகலைவா பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர்களை பள்ளி நிர்வாகம் குளிக்க தனியே அனுப்ப கூடாது. தண்ணீர் பற்றாக்குறை கருதி மாணவர்கள் சென்றாலும் துணைக்கு வாட்ச்மேன் செல்ல வழிகாண வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் உடனடியாக பள்ளியை ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான தண்ணீர் வசதியை செய்து தரவேண்டும் எனவும் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: