×

வளர்ச்சி பணிகள் குறித்து எம்பி ஆய்வு

உளுந்தூர்பேட்டை, பிப். 17:  உளுந்தூர்பேட்டை, திருநாவலூரில் வளர்ச்சி பணிகள் குறித்து விழுப்புரம் எம்பி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.  உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றியத்தில் உள்ள கிராமங்களின் வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு பணியும், இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் மோகன், புத்தனந்தல் அணையை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கூறினார்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும், உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்கள் தடையின்றி சென்று கல்வி கற்பதற்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், சீனுவாசன், ஜெயக்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், வைத்தியநாதன், ராஜவேல், நகர செயலாளர் டேனியல்ராஜ், தங்கவிசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு, சேரன், கனகஅம்பேத், லெனின், சாமிதுரை, வசந்தன் உள்ளிட்ட  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கோவை, நீலகிரி பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை