×

செய்யாறு அருகே பரபரப்பு ஆடு மேய்க்கும் தொழிலாளி அடித்துக்கொலை ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது

செய்யாறு, பிப்.17: செய்யாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(52), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி(45). இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் கடந்த 12ம் தேதி பக்கத்து கிராமமான குளமந்தை கிராமத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது, ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதன்(77) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகள் மேய்ந்தது.இதைப்பார்த்து ஆத்திரமடைந்த வரதன், இழப்பீடாக கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான 3 ஆடுகளை பிடித்து வைத்து கொண்டாராம். பின்னர், வீடு திரும்பிய கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து தனது மனைவியிடம் தெரிவித்து வேதனைப்பட்டாராம்.இந்நிலையில், மறுநாள் காலை சரஸ்வதி குளமந்தை கிராமத்திற்கு சென்று, ₹1,000ஐ இழப்பீடாக வரதனிடம் கொடுத்து விட்டு ஆடுகளை மீட்டுவந்தார். ஆனால், காலையில் வெளியே சென்ற கோபாலகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் வரதன் நிலத்திற்கு அருகில் உள்ள மரத்தில் கோபாலகிருஷ்ணன் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷாகின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.இதற்கிடையில், இறந்தவரின் மனைவி சரஸ்வதி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் கோபாலகிருஷ்ணனை வரதன் தான் அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.பின்னர், இதே கோரிக்கையை வலியுறுத்தி செய்யாறு- வந்தவாசி சாலையில் அரசூர் கூட்ரோடு அருகே கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் நேற்று மாலை 6 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து மறியலை கைவிட்டனர்.

Tags : teacher ,goat shepherd ,Cheyyar ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...