×

காட்பாடி அருகே பள்ளத்தூரில் முகாமிட்டுள்ள 14 யானைகளை கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம் தொடர்ந்து இடம் பெயர்வதால் கிராம மக்கள் பீதி

வேலூர், பிப்.17:காட்பாடி அருகே தொண்டான்துளசியை அடுத்து பள்ளத்தூர் கிராமத்தில் முகாமிட்டுள்ள 14 யானைகளை கிருஷ்ணகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் யானைகள் தொடர்ந்து அங்குமிங்கும் இடம்பெயர்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரிந்தது. இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிய 14 யானைகளை கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் இரவு லத்தேரி அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.இதுகுறித்து தகவல் அறிந்த லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பயங்கர சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். வெடிச்சத்தம் காரணமாக யானைகள் கூட்டம் அருகே உள்ள ஏரிக்குள் சென்று இருளில் மறைந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை யானைகள் கூட்டத்தை ராஜாதோப்பு, மோர்தானா வழியாக கிருஷ்ணகிரி வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், யானைகள் கூட்டம் மீண்டும் பள்ளத்தூர் கிராமத்தில் நுழைந்தன.இவ்வாறு தொடர்ந்து அங்குமிங்கும் இடம்பெயர்ந்து வரும் யானைகள் கூட்டத்தால் பள்ளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால் யானைகள் கூட்டம் ஊருக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க வேலூர் வனச்சரகர் மூர்த்தி தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் 15ம் மேற்பட்டவர்கள் கிராம மக்களுடன் கைகோர்த்து தீவிரமாக கண்காணித்து வருவதுடன் வெடிகள் வெடித்தபடியும், சத்தம் எழுப்பியும் அவற்றை கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் விரட்டும் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : forest ,Krishnagiri ,valley ,Kadpadi ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...