குறிப்பிட்ட புதிய மாவட்டங்களில் சேர்க்க சில கிராம மக்கள் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு ெகாண்டு சென்று தேவைக்கேற்ப எல்லை வரையறை வேலூரில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

வேலூர், பிப்.17:புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சேர்க்க சில கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தேதவைக்கேற்ப எல்லை வரையறை செய்யப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை, தணிக்கை ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று வேலூர் புரம் நாராயணி பீடத்தில் நடந்த சரஸ்வதி யாகத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஓராண்டில் 5 புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு முதல் 16 புதிய கோட்டங்கள், 92 புதிய தாலுகாக்கள் தோற்றுவிக்கப்பட்டன. புதிய மாவட்டங்களை பொறுத்தவரை பணியிடங்கள் நிரப்பப்பட்டு, தற்காலிக கட்டிடத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்து, செயல்பட்டு வருகின்றன.இப்போது புதிய மாவட்டங்களுக்கான, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ₹550 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாகத்தை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து, குறைதீர்க்கும் துறையாக இருக்கிறது.

Advertising
Advertising

இந்த ஆண்டு முதியோர் பென்சனுக்காக, நிதிநிலை அறிக்கையில் ₹4 ஆயிரத்து 315 கோடி, சுமார் 34 லட்சம் பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 1.73 லட்சம் முதியோர் உதவித்தொகைகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிலையான சொத்து ₹50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தபோது சிலருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே, ₹1 லட்சம் நிலையான சொத்து மதிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குரூப் ஹவுஸ் ஆகியவற்றை நிலையான சொத்தாக கணக்கிடக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த துறையில் பேரிடர் மேலாண்மை என்பது மிக முக்கியமான அங்கம். கடந்த ஆண்டு பெரிய அளவில் பேரிடர் இல்லை. ஆனாலும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சாலை விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது, அதற்கான எல்லை வரையறை அரசாணையில் முழுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்கள், குறிப்பிட்ட மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தேவைக்கேற்ப எல்லை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.கிராமங்களில் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும். அவ்வாறு கிடைக்கிறதா என்பதை நானும் நேரில் சென்று பார்க்க உள்ளேன். அதேபோல் மாவட்ட ஆட்சியர்களும் கிராம மக்களை அணுகி முன்னேற்பாடுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். உடன், வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் இருந்தார்.

Related Stories: