×

மாணவர்கள் தங்கள் கருத்துகள், புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும்: மத்திய மனித வள மேம்பாட்டு துறை உத்தரவு

நாகர்கோவில், பிப்.17:  ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக 2019-20ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் சார்ந்து விழிப்புணர்வு வழங்கும் வகையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 551 அரசு தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் மற்றும் 89 ஆயிரத்து 140 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளுக்காகவும் மத்திய மனித வள மேம்பாட்டு துறையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் சார்ந்து ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் அறிவுறுத்தலின்படி பயிற்சி பெற்ற அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு முதல்நிலை வழிகாட்டுபவர்களாக செயல்படுவதை ஊக்குவிக்க அவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.600 வீதம் நிதி அனுமதிக்கப்படுகிறது.

இதனை கொண்டு 6 விதமான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்குடன் இணைய பாதுகாப்பு, உடல் மற்றும் மனநல பாதுகாப்பு, பாலின பாகுபாடு, வளரிளம் பருவ கல்வி, சுய விழிப்புணர்வு, பிறர் மனநிலை அறிந்து செயல்படுதல், மன அழுத்தம் மற்றும் மன எழுச்சிகளை கையாளும் திறன் போன்ற கருப்பொருட்கள் சார்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.  ஒவ்வொரு பள்ளியும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை ஒருநாள் பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  மாணவர்களுக்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை பள்ளிக்கு அழைத்து அவர்களை மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பேச வைத்து அவர்கள் மூலம் தகுந்த அறிவுரைகளை வழங்கி மாணவர்கள் பள்ளியிலும், வீட்டிலும் சமுதாயத்திலும் பாதுகாப்பாக இருக்க வழிகாட்ட வேண்டும். மாணவர்கள் பள்ளிகளில் தங்களது பாதுகாப்பு சார்ந்த தங்கள் பின்னூட்டங்களை எழுத்துபூர்வமாக தெரிவிக்கும் வகையில் வழிவகைகள் ஏற்படுத்தலாம். குறிப்பாக மாணவிகள் தங்கள் பின்னூட்டங்களை பெண் ஆசிரியர்களிடம் வழங்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இதன் வாயிலாக மாணவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் குறைகள் இருப்பது தெரியவந்தால் அவற்றை களைய வேண்டும்.  மாணவர்கள் தங்கள் கருத்துகளை, புகார்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும். மாணவர் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அது சார்ந்த சீரிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அட்டை (சேப்டி போஸ்டர்) அச்சிட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி அவற்றை தினசரி கடைபிடிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : schools ,Central Human Resources Development Department ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...