×

திருவேற்காடு அருகே மாடு மீது பைக் மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

பூந்தமல்லி: சென்னை திருவேற்காடு அடுத்த காடுவெட்டி அருகே வீரராகவபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நந்தீஷ் (19). தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை வீட்டில் இருந்து பால்  வாங்குவதற்காக பைக்கில்  கடைக்கு சென்று கொண்டிருந்தார். காடுவெட்டி அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. இதில் மாட்டின் மீது பைக் மோதியதில் நந்தீஷ் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு  பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தீஷ் இறந்தார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நந்தீஷ் சடலத்தை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையே இந்த சம்பவம் அறிந்து நந்தீஷ் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 100க்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவேற்காடு போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து பொதுமக்கள்  மறியலை  கைவிட்டு   கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் மாடுகளை முறையாக பராமரிக்காமல் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். இதனால் அவை சாலைகளில் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த சில  மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பைக்கில் சென்ற நபர் மாட்டின் மீது மோதி இறந்துபோனார். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பது மட்டும் இல்லாமல் உரிமையாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Relatives ,road ,Thiruverkadu ,
× RELATED சொகுசு பைக் மாயம்