கிழக்கு கடற்கரை சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி வாலிபர் பலி : உடல் உறுப்புகள் தானம்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. திருவான்மியூர் பஸ் நிறுத்தம் அருகே இந்த கார், இருவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே ஈஞ்சம்பாக்கம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த திருவாரூர் மாவட்டம், திருக்குவளை கிராமத்தை சேர்ந்த சம்பத்குமார் (29) என்பவர் மீதும் இந்த கார் மோதிவிட்டு சென்றது.

Advertising
Advertising

இதில் படுகாயமடைந்த சம்பத்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரும்பாக்கம் தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து சம்பத்துகுமாரின் உறவினர்கள் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதற்கிடையே அக்கரை பகுதியில் போலீசார் காரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் காரை ஓட்டிய நபர், காஞ்சி மாவட்டம், செய்யூரை சேர்ந்தவர் விஷால் (29) என்பதும், மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சுயதொழில் செய்து வந்ததும், குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு  போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷாலை கைது செய்தனர்.

Related Stories: