நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவில் பூட்டு

மேச்சேரி, பிப்.13:  நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன், இரவு நேரங்களில் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை இயங்கி வருகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கிறது. பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் மனுக்களை கொண்டு வந்து கொடுப்பார்கள். இப்புகார்களின் மீது பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடி நடிவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன், பகல் நேரத்தில் மட்டுமே திறந்துள்ளது. இரவானதும் ஸ்டேஷனை போலீசார் மூடி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Advertising
Advertising

இந்நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு முன்னதாகவே, நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன் பூட்டப்பட்டிருந்தது. கிரில் கேட்டை இழுத்து சாத்தி விட்டு, சில போலீசார் மட்டும் உள்ளே இருந்தனர். இரவு பணியில் இருக்கும் போலீசார், ஸ்டேஷனை திறந்து வைத்துக்கொண்டு விழித்திருக்க வேண்டும். ஆனால் இரவில் தூங்குவதற்காக, போலீஸ் ஸ்டேஷனை இழுத்து மூடிவிட்டு உள்ளே போலீசார் இருக்கின்றனர். இதனால், அடிதடி உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக இரவில் யாராலும் புகார் கொடுக்க முடியவில்லை. வழக்கமாக இரவு பணியில் இருக்கும் போலீசார், ஸ்டேஷனுக்கு அடிதடி உள்ளிட்ட சாதாரண புகார் கொடுக்க வரும் பொதுமக்களை, காலையில் வரும் படி பதில் கூறி அனுப்புவார்கள். ஆனால், இங்கே ஸ்டேஷனே மூடிக்கிடப்பதால், பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே, இரவில் ஸ்டேஷனை பூட்டி வைத்திருக்கும் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட எஸ்பி தீபாகனிக்கர் நடவடிக்கை எடுத்து, 24 மணி நேரமும் ஸ்டேஷன் திறந்திருக்க ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: