×

கந்துவட்டி கொடுமையால் கேஷியர் தற்கொலை வங்கி ஊழியர்கள் உள்பட 7 பேருக்கு போலீஸ் சம்மன்

சேலம், பிப்.13:  சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் கேஷியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவருடன் பணியாற்றிய 2 வங்கி ஊழியர்கள் உள்பட 7 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி(54). இவர் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் கேஷியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 11 ம்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பழனிசாமி எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதம் ஒன்றை போலீசார் மீட்டனர். அதில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொள்வதாக அவர் உருக்கமாக எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், வாங்கிய பணத்திற்கு மேல் 3 மடங்கு பணம் செலுத்தியும் என்னை மிரட்டி, அசிங்கப்படுத்தினர். வட்டிக்காரர்களை விசாரித்து, எனது குடும்பத்தினருக்கு கருணை காட்டுங்கள்’ என கூறியிருந்தார்.
இதற்கிடையில் அவரது மனைவி, கருப்பூர் போலீசில் கந்து வட்டிக்காரர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார் கூறியுள்ளார். அதில், ராஜேந்திரன், சங்கர், பழனிவேல், பாபு, கோவிந்தன், அர்ச்சுனன், ராமசாமி ஆகியோரது பெயர்களை கூறியுள்ளார். இதில் ராஜேந்திரனும், சங்கரும் அவருடன் வங்கியில் வேலை பார்த்து வருகின்றனர். கோவிந்தன் அரசுத்துறையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். மற்றவர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்னர்.

Tags : cashier ,suicide bank staff ,
× RELATED சென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை...