×

ஓமலூர் ஒன்றிய குழுவின் முதல் ஆலோசனை கூட்டம்

ஓமலூர், பிப்.13: ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற முதல் கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னிலை வகித்துப்பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் தற்போதைய நிதி நிலைமை, நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். 17வது வார்டு கவுன்சிலர் சுமதி மாணிக்கம், தண்ணீர்தொட்டி பகுதியில் இருந்து பாகல்பட்டி வழித்தடத்தில் புதிய பஸ் சேவை தொடங்க வேண்டும் என்றார். 27வது வார்டு கவுன்சிலர் பரமசிவம், ஒன்றியக்குழு அலுவலகத்தை புதியதாக கட்ட வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை முழுமையாக கிராம ஊராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

 24வது வார்டு கவுன்சிலர் கோபால்சாமி, முத்துநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார். கவுன்சிலர் குப்புசாமி, குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் தண்ணீர் எடுத்துவிடுவதில் தாமதம் ஏற்பட்டு பற்றாக்குறை நிலவுகிறது என்றார். 23வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரகுமார், செம்மண்கூடல் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சமையலர் மற்றும் சத்துணவு பணியாளர்கள், உரிய நேரத்தில் சமைப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சி பேதமின்றி, அனைத்து வார்டுகளுக்கும் வளர்ச்சி பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். கூட்டத்தில் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Consultative Meeting of Omalur Union Committee ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது