சேலம் சோனா கல்லூரி சார்பில் தேசிய தொழில்நுட்ப, கலைத்திருவிழா

சேலம், பிப்.13:சேலம் சோனா கல்லூரி சார்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் கலைத்திருவிழாவில், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சேலம் ஜங்சன் மெயின்ரோட்டில் செயல்பட்டு வரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் கலை விழா போட்டிகள் கிரிவாஸ்’2020 என்ற பெயரில் நடக்கிறது. அடுத்த மாதம் 6, 7ம் தேதிகளில் நடைபெறும் விழாவிற்கான போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. சோனா கல்லூரி முதல்வர் செந்தில்குமார், கிரிவாஸ் 2020 போஸ்டரை வெளியிட்டு பேசியதாவது: சேலம் சோனா கல்லூரியில் நடக்கும் இவ்விழாவில், தொழில்நுட்ப பிரிவில் கார் ரேசிங், ட்ரோன் இயக்கம், ரோபோடிக் பயன்பாடு, பேஷன்ஷோ என 10 வகையிலான போட்டிகளும், கலைப்பிரிவில் பாட்டு, நடனம், குறும்படம், குவிஸ், போட்டோகிராபி என 8 வகையான போட்டிகளும் நடத்தப்படுகிறது. வரும் 6ம் தேதி மாலை நடைபெறும் விழாவில், பிரபல பாடகர்கள் சத்திய பிரகாஷ் மற்றும் பிரியங்கா ஆகியோரும், 7ம் தேதி விழாவில், கைதி பட நடிகர் அர்ஜூன் தாஸூம் பங்கேற்கின்றனர்.

இக்கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், குறைந்தபட்ச நுழைவு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தேசிய அளவில் நடக்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது,” என்றார். அப்போது, முதன்மை ஒருங்கிணைப்பாளர் ரேணுகா, ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் செந்தில்வடிவு, தினேஷ், ஜெயச்சந்திரன் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

Related Stories: