×

உள்ளாட்சி தேர்தலின்போது மாற்றப்பட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு

சேலம், பிப்.13: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலையொட்டி சொந்த ஊரில் பணிபுரிந்தவர்கள் மற்றும் 3 ஆண்டுக்கும் மேலாக ஒரு இடத்தில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தேர்தல் விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தங்களை பழைய இடத்திற்கே மாற்றம் செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:சேலம் மாவட்டத்தில் 2 கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலானது, கலெக்டர் வழிகாட்டுதலின்படி சுமூகமாக நடத்தப்பட்டது. பல்வேறு திட்ட பணிகள், பலதரப்பட்ட அரசியல் நெருக்கடிகள், மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் மற்றும் ஊழியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஊரக வளர்ச்சித்துறையினர் தேர்தலை சிறப்பாக நடத்தியுள்ளனர்.

அதேசமயம், கடந்த ஆண்டு சுதந்திர தினம் மற்றும் ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாக்களில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஓரிருவர் மட்டுமே கவுரவிக்கப்பட்டது ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதை கருத்தில் கொண்டு, ஊரக வளர்ச்சித்துறையினருக்கென சிறப்பு கூட்டம் நடத்தி, அவர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கி கவுரவிக்க  வேண்டும். மேலும், தேர்தலையொட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களை, தொலைதூரம் மற்றும் அவர்களது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : elections ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் செம்மொழிகள்...