×

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தவர்கள் 27.9 சதவீதம்

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள் 27.9 சதவீதமாக உள்ளது. இதை தடுக்க நாடகம், கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தேசிய குடும்ப நல ஆய்வின்படி, இந்தியாவில் நடக்கும் குழந்தை திருமணங்களில் 17 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் சேலம், தர்மபுரி, சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1458 குழந்தைகள் திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை திருமணத்தில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. 43 சதவீத இந்திய சிறுமிகளுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் ஆகிவிடுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2015-16ம் ஆண்டு புள்ளி விவரப்படி, 18வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் 27.9 சதவீதமாக உள்ளது. சமகல்வி இயக்கம் சார்பில், 11 வயது முதல் 18 வயது வரைக்குள்ளான 210 இளம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களை சார்ந்த 21 கிராமத்தில், 11 வயது முதல் 18வயது உள்ளவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஒருவருடத்தில் குழந்தை திருமணம் 37 நடந்துள்ளது. 2020 நடப்பாண்டு குழந்தை திருமணம் 13 தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 112 இளம் வயது திருமணங்கள், சமூக நலத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு 280 இளம் வயது திருமணங்களும், 2017ம் ஆண்டு-180 குழந்தைகள் திருமணங்களும், 2016ம் ஆண்டு-157 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெண்குழந்தைகளுடைய பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 10, 18 சதவீகிதம் நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைந்துவிட்டது. 30 சதவீத ஆண்களுக்கு பெண்கள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் 2018ம் ஆண்டு புள்ளிவிபரப்படி 1000க்கு 936 பெண் குழந்தைகளே உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 1000க்கு 943 பெண்குழந்தைகளே உள்ளனர். 21 கர்ப்பிணிகளில் ஒருவர் கருக்கலைப்பு செய்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை குடும்ப நல ஆய்வின்படி, 21 கிராமத்தில் 260 கர்ப்பிணிகள் உள்ளனர். இதில் 95 பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தை திருமணம் தடுத்தல், கருக்கலைப்பு தடுத்து நிறுத்தல் குறித்த நாடகம், கலைநிகழ்ச்சி மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று விழிப்புணர்வு கலைப்பயணம் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி கலெக்டர் அலுவலக வளாத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு கலைப்பயணம் தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர், ஒன்றியங்களில் நடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில் வளம் மிகக் குறைவாக உள்ளதால், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பதில் பல்வேறு சிரமம் இருப்பதாக கூறி, திருமணம் வயதுக்கு முன்பே, திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் கருக்கலைப்பு சம்பவம் அதிகம் நடக்கிறது. குழந்தை திருமணம், கருக்கலைப்புகளை தடுக்கவே கலைப்பயணம் மூலம் நாடகம், கிராமப்புற நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,’ என்றனர்.

Tags : Dharmapuri district ,children ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...