×

பழங்குடியினர் நிலத்தை அபகரித்ததாக புகார்

தர்மபுரி, பிப்.13: அரூர் அருகே சிட்லிங்கில், பழங்குடியினர் நிலத்தை அபகரித்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர்.தர்மபுரி மாவட்டம் சிட்லிங் ஊராட்சி, காளியான்கொட்டாய் கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட காளியான்கொட்டாய் மற்றும் நம்மங்காடு கிராமங்களில், சுமார் 700க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் காலியாக உள்ள சுமார் 2.2 ஏக்கர் நிலத்தை, முன்னோர்கள் காலத்தில் இருந்து கோயில் திருவிழா போன்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தி வருகிறோம். இந்த இடத்தில் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என, கடந்த 2013ம் ஆண்டு மனு கொடுத்துள்ளோம். இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு மலைவாழ் பழங்குடி இனத்தை சாராத ஒருவர், நாங்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை, அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், ஊர் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி சம்பந்தப்பட்ட நிலத்தை கிரயம் செய்ததாக கூறப்படும் நபர், தனது ஆட்களுடன் வந்தார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு நடந்தது. தகவல் அறிந்த சப் கலெக்டர் நேரில் வந்து சமாதானம் செய்தார். இந்த தகராறு தொடர்பாக, கோட்டப்பட்டி போலீசார் பழங்குடி இன பெண்கள் மீது பொய்வழக்கு போட்டு தொந்தரவு செய்கின்றனர். எனவே, மலைவாழ் பகுதி பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் போலீசாரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் நிலத்தை, எங்களுக்கே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags :
× RELATED மக்களுக்கு பிரதமர் நன்றி