×

தொழுநோயை ஒழிக்க நல்லெண்ண தூதுவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி மாவட்டத்தில்  தொழுநோயை ஒழிக்க, கல்லூரி மாணவ, மாணவிகள் நல்லெண்ண தூதுவர்களாக மாற வேண்டும் என கலெக்டர் பேசினார். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, கலெக்டர் மலர்விழி பேசியதாவது: தொழுநோய் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 20 ஆயிரத்தில் ஒருவருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழுநோய் ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழுநோயின் அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, தொழுநோய் தொற்றுநோய் அல்ல என்பதை தெரியப்படுத்த வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் அனைவரையும் போல், இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். எனவே, உணர்ச்சியற்ற தேமல், படை போன்றவை உடலில் இருந்தால், உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துங்கள். நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, கல்லூரி மாணவ, மாணவிகள் தொழுநோயை ஒழிக்க நல்லெண்ண தூதுவர்களாக மாறுவதோடு, தீவிரமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சீனிவாசராஜ், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) டாக்டர் புவனேஸ்வரி, இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்ர் சகாய ஸ்டீபன்ராஜ்,  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பாக்கியமணி, துணை இயக்குநர் (தொழுநோய்) நலக்கல்வியாளர் ராஜாமணி, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திருமணி மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : ambassadors ,
× RELATED இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலால் 41 தூதர்களை திரும்ப பெற்றது கனடா