புத்தருக்கான பட்டப்பெயர்களில் ஒன்றுதான் விநாயகர்

திருச்சி, பிப்.13: திருச்சியில் தமிழர் அறிவியக்கப் பேரவை கூட்டம் அவைத்தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் பேசும்போது, மெகாஞ்சதாரா, ஹரப்பா சிந்து சமவெளி நாகரித்தை சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி என்பது சமஸ்கிருத சொல். மேலும் அது இசையைக் குறிக்கும் சொல்லாகும். சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று பல அகழ்வாய்வு நிபுணர்கள் உறுதி செய்த வேளையில், எந்த ஆதாரமும் இல்லாமல் நிதி அமைச்சர் சரஸ்வதி நாகரிகம் என்று நாடாளுமன்றத்தில் பேசியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. விநாயகர் என்பது புத்தருக்கான பட்டப் பெயர்களில் ஒன்று என்று 1732ல் வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் என்பதற்கு ஓப்பிலா தலைவன் என்றும், நிகரில்லா தலைவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 22ம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது என்பது புத்தரோடு தொடர்புடையதாகும். எனவே இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் கொண்டாடாமல் பிள்ளையார் அல்லது கணேஷ் சதுர்த்தி கொண்டாட வேண்டும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேராசிரியர் நெடுஞ்செழியன், வழக்கறிஞர் தமிழகன், குறள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: