மணப்பாறை அருகே கொட்டப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர்களுக்கு பரிந்துரை கடிதம்

மணப்பாறை பிப்.13: மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அமைச்சர்கள் வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தது கொட்டப்பட்டி கிராமம். மொண் டிப்பட்டி, கலிங்கப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 3 ஊராட்சிகளின் மையமாக இது அமைந்துள்ளது. இந்த 3 ஊராட்சிகளிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இது தவிர தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இந்த ஊரின் அருகில் அமைந்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை 10 கி.மீ. தூரம் உள்ள மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது.

எனவே, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கொட்டப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நிர்மலா சந்திரசேகர், நாட்டாண்மை ராஜேந்திரன், சமூக ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர் திருச்சி கலெக்டரின் குறை தீர்க்கும் பிரிவு மற்றும் ரங்கம் எம்எல்ஏவும், அமைச்சருமான வளர்மதி ஆகியோரிடத்தில், கிராம மக்கள் சார்பில் மனு அளித்தனர். இந்த மனுவை பரிசீலித்த திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர், கொட்டப்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தேவையான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்தார். இதனையடுத்து கொட்டப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக்கோரி அமைச்சர்கள் வளர்மதி, விஜயபாஸ்கருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: