துறையூர் நகராட்சி பகுதியில் சேட்டை குரங்குகள் அட்டகாசம் குடியிருப்புவாசிகள் அவதி

துறையூர், பிப்.13: துறையூர் நகராட்சியில் 11வது வார்டில் உள்ள சந்திகருப்பு கோயில் தெரு உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தெருவில் கடந்த சில மாதங்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் செல்லும்போது அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களை குரங்குகள் பறித்துச் செல்கின்றன. மேலும் சிறிய ஓட்டைகள் இருந்தாலும் குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து அங்குள்ள பொருட்களை துவம்சம் செய்து வெளியில் வாரியிறைத்து சென்று விடுகின்றன. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது போன்ற சேட்டைகளை குரங்குகள் செய்யும்போது அவற்றை விரட்டினால் கடிக்க துரத்திக்கொண்டு பாய்ந்து வருகிறது.

மேலும் இப்பகுதி மக்கள் நிம்மதியாக கடைக்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளனர். வீட்டிற்க்கு பால் பாக்கெட் போட்டு சென்றால் அதனையும் எடுத்து கிழித்து பாலை வீணாக்குகிறது. இதனால் குழந்தைகளுக்கு பால் இல்லாமல் அவதிப்படுகின்றோம் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் அலைகிறது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, வனத்துறையினரால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்பதே பகுதி மக்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது.

Related Stories: