×

திருச்சி பெண்ணிடம் போலி ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து

திருச்சி, பிப்.13: திருச்சி ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் போலி ஏடிஎம் கார்டை மாற்றிக்கொடுத்து அவரது கணக்கிலிருந்து ரூ.11 ஆயிரத்தை சுருட்டிய பலே கில்லாடி வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் பல இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது. திருச்சியில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஒரிஜினல் ஏடிஎம் கார்டுகளை நைசாக மாற்றி போலி ஏடிஎம் கார்டுகளை கொடுத்து பணத்தை அபேஸ் செய்வது தொடர்ந்து வந்தது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் திருச்சி புங்கனூர் காந்திநகரை சேர்ந்த பிரபு மனைவி கமலி(24) என்பவர் கருமண்டபம் பகுதியில் வங்கியுடன் இணைந்துள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அப்போது அருகில் நின்ற வாலிபரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார். அவரும் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து ரகசிய எண்ணை மாற்றி போட்டுவிட்டு பணம் வரவில்லை என்றும், வங்கிக்குள் சென்று விசாரிக்கும்படி கூறியுள்ளார். இதனால் கமலி வங்கிக்குள் சென்று விசாரித்தார். அப்போது அவரது கணக்கை பார்த்த வங்கி ஊழியர் இப்போதுதான் ரூ.11 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலி ஏடிஎம்முக்கு வந்து பார்த்தபோது அந்த நபர் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. கமலியிடம் கொடுத்தது போலி ஏடிஎம் கார்டு என தெரியவந்தது.

இது குறித்து கமலி அளித்த புாகரின் பேரில் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடிவந்தனர். வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான அந்த நபரின் போட்டோவை வைத்து அவரை தேடி வந்தனர். மேலும் வங்கி அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டிலும் அந்த நபரின் படத்தை கொடுத்து போலீசார் கண்காணித்தனர். இந்நிலையில் அந்த நபர் நேற்று முன்தினம் அதே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் அளித்த தகவலின் பேரில் கன்டோன்மென்ட் தனிப்படை போலீசாரும் அங்கிருந்த தெற்கு போக்குவரத்து பிரிவு சிறப்பு எஸ்ஐ ராஜா ஆகியோர் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் குளித்தலை கீழநங்கவரம் அக்ரகாரத்தை சேர்ந்த சரவணகுமார்(26) என்பதும், மேலும் பல இடங்களில் இதுபோல் போலி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்து வந்ததும் தெரியவந்தது. இதுவரை எத்தனை பேரிடம், எவ்வளவு தொகை கொள்ளையடித்துள்ளார் என போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy ,
× RELATED தொடர் கொள்ளை எதிரொலி திருச்சியில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் இட மாற்றம்