×

மாணவர்கள் காய்கறிகள் அதிகம் சாப்பிடும் நோக்கத்துடன் அட்சயப்பாத்திரம் திட்டம் தென்னூர் பள்ளியில் துவக்கம்

திருச்சி, பிப்.13: திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் அட்சயபாத்திரம் (பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை தினமும் வழங்குதல்) திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு விதவிதமான சுவையான சத்துணவு வழங்கப்படுகிறது. அச்சத்துணவுடன் கூடுதலாக, இப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் தினந்தோறும் தங்களால் இயன்ற ஒன்றிரண்டு காய்கறிகளை பள்ளிக்கு கொண்டுவந்து பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அட்சயபாத்திரத்தில் போட்டுவிட்டு சென்று விடுவார்கள். பிறகு மதிய சத்துணவில் அந்த காய்கறிகள் சமைக்கும்போது கூடுதலாக சேர்த்து மாணவர்களுக்கு வழங்கப்படும். பொதுவாக மாணவர்கள் வீட்டில் காய்கறிகளை உண்பது இல்லை என பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பேசினார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கண்காணிப்பின் மூலம் காய்கறிகள் மதிய உணவில் கூடுதலாக உட்கொள்ள செய்வதால் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கலாம். மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும். மேலும் கூலி வேலை செய்யும் பெற்றோர்களால் வீட்டில் காய்கறிகளை போதுமான அளவில் வாங்கி சமைப்பது கடினம். காய்கறி விலை ஏற்ற இறக்கத்திற்கு உரியது. கூலி வேலை செய்யும் பெற்றோர்களால் அதிக விலை கொடுத்து காய்கறிகள் வாங்க முடியாது. இத்திட்டம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஒத்துழைப்போடு நடைபெறும். எவ்வித பணமும் வசூலிப்பது இல்லை. எவ்வித செலவும் இல்லை.

மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு கடந்த 2 ஆண்டுகளாக காலை உணவுத்திட்டம் இப்பள்ளியில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. 150 மாணவ, மாணவியர் பயன் அடைகின்றனர். இந்த திட்டத்தை துவக்கியதையடுத்து அதற்கு எங்கள் பள்ளி-எங்கள் காய்கறி-எங்கள் சத்துணவு-என்றும் ஆரோக்கியம் என்ற தலைப்பிட்ட வாசகத்துடன் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதில் இப்பள்ளியின் செயல்பாடு உள்ளது. திருச்சி சிப்காட் தாசில்தார் கோகுல், சைன் திருச்சி நிறுவனர் மனோஜ் தர்மர் ஆகியோர் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். தாசில்தார் கோகுல் பேசுகையில், ‘பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் தினந்தோறும் தங்களால் இயன்ற ஒன்றிரண்டு காய்கறிகளை பள்ளிக்கு கொண்டு வந்து பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அட்சயபாத்திரத்தில் போட்டுவிட்டு சென்று விடுவார்கள். பிறகு மதிய சத்துணவில் அந்த காய்கறிகள் சமைக்கும் போது கூடுதலாக சேர்த்து மாணவர்களுக்கு வழங்கப்படும். பொதுவாக மாணவர்கள் வீட்டில் காய்கறிகளை உண்பது இல்லை என பெரும்பாலான பெற்றோர்களின் கருத்து. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கண்காணிப்பின் மூலம் காய்கறிகள் மதிய உணவில் கூடுதலாக உட்கொள்ள செய்வதால் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கலாம்’ என்றார். திருச்சி நகர சரக வட்டாரக் கல்வி அலுவலர் அருள்தாஸ்நேவிஸ், ஜெயலட்சுமி, நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிராஜுதீன், யோகா பயிற்றுனர் காயத்திரி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை உமா நன்றி கூறினார். இதேபோன்ற திட்டம் பிற பள்ளிகளும் பின்பற்றினால் ஏழை மாணவ, மாணவியர் பயனடைவர் என்பது நிதர்சனம்.

Tags : Thennur School ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ