×

நகராட்சியில் காலி பணியிடத்தால் வளர்ச்சி பணிகள் கடும் பாதிப்பு

சிவகங்கை, பிப்.13: சிவகங்கை நகராட்சியில் ஆணையாளர் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், வளர்ச்சி பணிகள் பாதிப்படைவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வார்டுகளுக்கான வளர்ச்சி பணிகள் அனைத்தும் நகராட்சி மூலமே செய்யப்படுகின்றன. இங்கு கடந்த சில ஆண்டிற்கு முன்னர் நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியானது. இதனால் நகராட்சி பொறியாளரே ஆணையாளர் பணியிடத்தை கவனித்து வருகிறார். வருவாய் ஆய்வாளர், டைப்பிஸ்ட், பணி மேற்பார்வையாளர், மேலாளர், பணி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன. இங்கு பணிபுரிபவர்கள் வேறு நகராட்சிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் நிலையில், புதிய அலுவலர்கள் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இதனால் புதிய வீடுகளுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்குவது, புதிய வீட்டிற்கு வரி விதிப்பு செய்வது, பொது சுகாதாரப் பணிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கால தாமதம் ஏற்படுகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நகராட்சியின் தனி அதிகாரி பணியையும் பொறியாளரே கவனித்து வருகிறார். கலெக்டர், மண்டல இயக்குநர் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வது என பல்வேறு பணிகளை இவர் கவனிப்பதால் பொறியாளருக்கான பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:வரி வசூல், கட்டிட வரைபட அனுமதி, வரி விதிப்பு, வளர்ச்சிப் பணிகள் ஆய்வு என ஏராளமான பணிகள் நகராட்சியில் உள்ளன. ஆனால் ஆணையாளர் பணியிடம் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் அனைத்து பணிகளும் தாமதமாகியுள்ளன.
 வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய முடியாத நிலையால் பல்வேறு முறைகேடு நடக்கிறது. பணிகளை ஆய்வு செய்ய பொறியாளர் நேரில் செல்ல வேண்டும். ஆனால் ஆணையாளர் பொறுப்பில் பொறியாளர் இருப்பதால் ஆய்வுப் பணிக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக ஆணையாளர், உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : workplace ,municipality ,
× RELATED புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு...