×

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் கட் வாடகை கட்டாத கடைகளுக்கு பூட்டு

காரைக்குடி, பிப்.13: காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி சார்பில் வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் குத்தகை இனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த இனங்கள் மூலம் 30 கோடியே 94 லட்ச ரூபாய் வரை வரி வசூல் செய்யப்படுகிறது. இதுவரை 11 கோடியே 57 லட்ச ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 35 ஆயிரத்து 560 வீட்டு வரி இனங்கள் மூலம் 8 கோடியே 60 லட்சம் வரை வசூல் செய்யப்படும். குத்தகை இனங்கள் மூலம் புதிய, பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள், அண்ணா மார்க்கெட், கல்லுகட்டி, சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள 253 கடைகளில் 5 கோடியே 52 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்படும். இதில் 3 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. முறையாக வாடகை செலுத்தாத 26 கடைகளுக்கு நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. 4600 பேரிடம் தொழில்வரியாக ரூ 1 கோடியே 57 லட்ச ரூபாய் வரை வரவேண்டும் ஆனால், நீண்ட நாட்களாக முறையாக தொழில்வரி பல வணிக நிறுவனங்கள் செலுத்தாமல் உள்ளதால் 1 கோடியே 15 லட்ச ரூபாய் வரை பாக்கி உள்ளது. 14 ஆயிரத்து 437 குடிநீர் இணைப்புகளுக்கு 2 கோடியே 67 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்படும். இதில் 1 கோடியே 4 லட்ச ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.

காலியிட வரியை பொறுத்தவரை 3943 இடங்களுக்கு 1 கோடியே 37 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட வேண்டும் ஆனால், காலியிடங்களுக்கு பலர் முறையாக வரி செலுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதால் 1 கோடியே 11 லட்ச ரூபாய் பாக்கி உள்ளது. பல்வேறு வகைகளில் நகராட்சிக்கு 19 கோடியே 37 லட்ச ரூபாய் வரை வரி பாக்கி உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் மாலதி கூறுகையில்``, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பொதுமக்கள் முறையாக செலுத்த வேண்டும். இதற்கு என அதிகாரிகள் கொண்டு குழு அமைக்கப்பட்டு தீவிர வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. பாக்கி இல்லாமல் வரி செய்வதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். காலியிடங்களுக்கு செலுத்த வேண்டிய வரியை பொறுத்தவரை பலர் முறையாக செலுத்தமால் உள்ளனர். பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் வரி செலுத்தவில்லை. உரிய வரி தொகை செலுத்த தவறினால் நகராட்சி வசம் இடம் கையப்படுத்தப்படும். அதேபோல் பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும்’’ என்றார்.

Tags : shops ,
× RELATED பூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு