×

ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா கணினி திருத்த சிறப்பு முகாம்

ஆர்.எஸ்.மங்கலம், பிப். 13:  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் கணிணி திருத்தம் சம்மந்தமான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் பல வருடங்களாக கிடப்பில் கிடந்த கணிணி திருத்தம் உள்ளிட்ட மனுக்களில் பிரிக்கப்படாத ஆர்.எஸ்.மங்கலம் உள்ளடக்கிய திருவாடானை தாலுகாவில் உள்ள மனுக்கள் ஏராளமாக இருந்து வந்தது. இந்நிலையில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற.  சுகபுத்ராவின் கவணத்திற்கு பொது மக்கள் கொண்டு சென்றனர். இதுபற்றி தினகரன் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்டத்தில் முதன்முதலாக திருவாடானை தாலுகாவில் இருந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து புதிதாக அமைந்த ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் நிலுவையில் இருந்த மனுக்களை எடுத்து திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று உதவி ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.

முகாமில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், சோழந்தூர் ஆகிய உள்வட்டங்களை அடங்கிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் இராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக தேக்க நிலையில் இருந்த கணினியில்  பெயர்திருத்தம், சர்வே எண் விடுதல், தவறுதலாக அரசு புறம்போக்கு என பதிவு, புல எண் திருத்தம், விஸ்தீரணம் திருத்தல் உள்ளிட்ட மனுக்களை எடுத்து அவற்றை  சரி பார்த்து உரிய திருத்தம் செய்வதற்காக நடைபெற்றது. முகாமில் கணிணியல் பெயர் திருத்தம் சம்மந்தமாக 39 மனுக்களும், சர்வே எண் விடுதல் என 25 மனுக்களும், அரசு புறம்போக்கு என தவறுதலாக பதிவு உள்ளதாக 5 மனுக்களும், புல எண் திருத்தம் சம்மந்தமாக 1 மனுவும், விஸ்தீரணம் திருத்தம் சம்மந்தமாக 8 மனுக்களும் என மொத்தம் 78 மனுக்கள் பரிசீலனையில் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் உடனடியாக 14 நபர்களுக்கான கணினி திருத்தம் செய்வதற்கான உத்தரவை உதவி ஆட்சியர் வழங்கினார். மீதம் உள்ள மனுக்களை விரைவில் உரிய ஆவணங்களை சரி பார்த்து வழங்கப்படும் என்று பொதுமக்களிடம் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சாந்தி, உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி, தனி உதவியாளர் சரவணன், மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் ஆர்.எஸ்.மங்கலம் ஞானசேகரன், சோழந்தூர் மணிவண்ணன், ஆனந்தூர் ரவிச்சந்திரன் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இது குறித்து மூதாட்டி சுலைஹா பீவி கூறுகையில், எனக்கு பூர்வீக சொத்து உள்ளது. அதில் பெயர் தவறுதலாக இருந்துள்ளது. அது சம்மந்தமாக எனக்கு அதிக விபரம் தெரியாததாலும், படிக்க தெரியாததாலும் நம்ம சொத்து நம்மிடத்தில் தானே உள்ளது என இருந்து விட்டேன். எனது முதுமை காரணமாக எனது மகனுக்கு எழுதி கொடுத்து பட்டாவை அவர் பெயருக்கு மாற்றி விடுவோம் என்று எண்ணியபோது தான் எனது சொத்திற்குறியபட்டாவில் பிழை இருப்பது தெரிய வந்தது தெரியவந்தது. தற்போது உதவி ஆட்சியரை நேரில் சந்தித்து விபரம் சொன்னேன். விரைவில் திருத்தம் செய்து தரப்படும் என்றார்.

உதவி ஆட்சியர் சுக புத்ரா கூறுகையில், இதுபோன்று சிறப்பு முகாம்கள் போடப்பட்டு பொதுமக்களுக்கு உரிய நடவடிக்கை மூலம் பரிசீலனை செய்து ஆவணங்களை சரி பார்த்து உரிய உத்தரவுகள் வழங்கப்படும். இந்த மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து வட்டாட்சியர்கள், ஆர்.ஐ.கள், வி.ஏ.ஒகள், கிராம உதவியாளர்கள் அனைவரும் இணைந்து பொதுமக்களிடம் உரிய விழிப்புனர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Pata Computer Modification Special Camp ,RS Mangalam ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாய்க்குள் பெண் மர்ம சாவு