×

வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது

மதுரை, பிப். 13: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா, குளத்துப்பட்டியைச் சேர்ந்த வள்ளியப்பன் மனைவி கல்யாணி (64). கடந்த 10ம் தேதி கணவருடன், இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த கல்யாணி, திருமயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கல்யாணி நேற்று மூளைச்சாவு அடைந்தார். மூளை நரம்பியல் மருத்துவர்கள, கல்யாணியின் மூளை நிரந்தரமாக செயலிழந்து அவர் நிரந்தர மூளைச்சாவு அடைந்ததை உறுதிபடுத்தினர்.

கல்யாணியின் மூளை செயல் இழந்துவிட்டாலும், நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அவரது, சிறு நீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்களை, உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு பொருத்தி மறு வாழ்வு கொடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கல்யாணியின் உடல் உறுப்புகனை தானமாக தர, அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து முறையான அரசு அனுமதி பெற்று, 5 மணிநேரம் உறுப்பு தான அறுவை சிகிச்சை நடந்தது. கல்யாணியின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

Tags : automobile accident ,
× RELATED நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி...