×

வத்தலக்குண்டுவில் டெல்லி பல்கலை மாணவர்கள் தாக்குதலை கண்டித்து தர்ணா

வத்தலக்குண்டு, பிப். 13: வத்தலக்குண்டுவில் டெல்லி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லியில் ஜாமியா மில்லிய பல்கலைக்கழக மாணவர்கள் அறவழியில் போராடி கொண்டிருந்தனர். இவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி வத்தலக்குண்டுவில் ஜிம்ஆ பெரிய பள்ளிவாசல் அருகே தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. தமுமுக நகர தலைவர் இம்தியாஸ் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில் நிர்வாகிகள் செயின் சையது இப்ராகிம், ஜெய்லானி, அன்சாரி தாரிக், சதாம் உசேன், அக்கீம்சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமரன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dharna ,attack ,Delhi University ,
× RELATED சம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா