×

காங்கயம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்

காங்கயம், பிப். 13:  காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒன்றியக் கூட்டத்தில் 7 அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள கவுசின்சிலர்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் செலவினங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.17 லட்சம் தவிர்த்து, மீதமுள்ள தொகையினை ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து மேற்கொள்வது, காங்கயம் ஊராட்சிக்கு சொந்தமான பழுதடைந்து, பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றுவது, அதற்கான செலவினங்களை பொது நிதியை பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலர் சுசீலா பேசியதாவது: காங்கயம் ஒன்றியத்தில் உள்ள 61 அரசு பள்ளிகள் கழிவறையை தூய்மை செய்யும் துப்புரவு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து, இதுவரை சம்பளம் வழங்காமல் உள்ளது. இவற்றை உடனே வழங்க வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் மகேஷ்குமார் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு துறை ரீதியாக ஆலோசனை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கூறுவதற்காக  காங்கயத்தில் உள்ள போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட 19 துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியத்துறை, கால்நடைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், நெடுஞ்சாலைத்துறை ஆகிய 7 துறைகளின் அதிகாரிகள், இதில் கலந்து கொள்ளவில்லை

Tags : Kangayam Panchayat Union ,meeting ,
× RELATED சமூக இடைவெளியை கடைபிடிக்காத...